இனி 24 மணி நேரமும் ரேபிஸ் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை..!
தமிழகத்தில்ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி பற்றாக்குறை மற்றும் மதியம் வரை மட்டுமே தடுப்பூசி போடும் நிலை இருந்தது. ஆனால், இனி அப்படி இருக்காது. மூன்று லட்சத்துக்கும் அதிகமான நாய் கடி வழக்குகள் பதிவாகியுள்ளன. 2024-ல் 4.8 லட்சம் பேர் நாய்கடிக்கு ஆளாகினர். 24 பேர் இறந்தனர். 2023-ல் 4.41 லட்சம் பேர் கடிக்கப்பட்டனர், 18 பேர் இறந்தனர்.
இது தொடர்பாக டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:- ரேபிஸ் ஒரு கொடிய வைரஸ் தொற்று. இது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். அறிகுறிகள் தெரிந்தால் மரணம் நிச்சயம். "சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவது ரொம்ப முக்கியம். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டுள்ளது. பல ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரவில் மூடப்பட்டிருக்கலாம். மருத்துவர்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நர்ஸ்கள் இருப்பார்கள். அவர்கள் அவசர காலங்களில் கவனிப்பார்கள். பாதுகாப்புக்காக கதவை பூட்டி வைத்திருந்தாலும், அவசர தேவைக்கு கதவை திறக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடித்த காயத்தை சுத்தம் செய்து, உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் தடுப்பூசி மற்றும் இம்யூனோகுளோபுலின் கொடுக்க வேண்டும். மருந்து வீணாவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவது ரொம்ப முக்கியம்". அதாவது, நாய் கடித்த உடனே தடுப்பூசி போட வேண்டும். தாமதிக்கக் கூடாது. மருந்து வீணாவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.