பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி..!
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் நடப்பாண்டு சீசன் கவுலூன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, டென்மார்க்கின் லைன் கிறிஸ்டோபர்சனை எதிர் கொண்டார். இந்த போட்டியின் முதல் செட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து 21-15 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
அதன் பின் நடைபெற்ற இரண்டாவது செட்டில் கம்பேக் கொடுத்த கிறிஸ்டோபர்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இரண்டாவது செட்டை 21-16 என்ற கணக்கில் வென்று சிந்துவுக்கு அதிர்ச்சியளித்தார். இதனால் போட்டியின் முடிவானது மூன்றாவது செட்டிற்கு சென்றது. இருவரும் சரிக்கு சமமாக போட்டியிட்டதன் காரணமாக, இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தன.
பரபரப்பாக நடைபெற்ற மூன்றாவது செட்டில் இறுதி வரை போராடிய பி.வி.சிந்து 19-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதன் மூலம் டென்மார்க்கின் லைன் கிறிஸ்டோபர்சன் 16-21, 21-16, 21-19 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்துவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டியில் தோல்வியை தழுவிய பி.வி.சிந்து நடப்பு ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் முதல் சுற்றோடு வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.