ஜெயலலிதா நினைவிடத்தில் தள்ளுமுள்ளு; ஈபிஎஸ் காரை முற்றுகையிட்ட அமமுகவினர்!!

தமிழ்நாடு முழுவதும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் ஏராளமானோர் கூடினர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து அதிமுகவின் மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டுச் சென்ற எடப்பாடி பழனிச்சாமியின் காரை அமமுக தொண்டர்கள் திடீரென சூழ்ந்து கொண்டனர். இதனால் அதிமுக மற்றும் அமமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து எடப்பாடி பழனிச்சாமியின் காரை அனுப்பி வைத்தனர்.