1. Home
  2. தமிழ்நாடு

புரட்சி பாரதம் கட்சி தலைவர் எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு?

1

திருவள்ளூரை சேந்தவர் தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் சகோதரரை கடத்தியது தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பூவை ஜெகன்மூர்த்திக்கு உத்தரவிட்டது. அதன்படி அவர் விசாரணைக்கு ஆஜரானார்.இந்தநிலையில் பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ஜெகன்மூர்த்தி தரப்பில் ஆஜரான வக்கீல், 'மனுதாரருக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. சம்பவம் நடைபெற்ற அன்று மனுதாரர் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டார். கடத்தப்பட்டதாக கூறப்படும் சிறுவனையோ, காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியையோ மனுதாரர் பார்த்தது இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கில் மனுதாரரை சேர்த்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க மனுதாரர் தயாராக உள்ளார். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்' என வாதாடினார்.போலீசார் சார்பில் ஆஜரான வக்கீல், 'ஒட்டு மொத்த கடத்தல் சம்பவத்துக்கும் மூளையாக செயல்பட்டது பூவை ஜெகன்மூர்த்தி தான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீஸ் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை. அவரை கைது செய்து விசாரிக்க வேண்டியது உள்ளது. முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார்.


இந்த சம்பவத்தில் கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமிற்கு தொடர்பு உள்ளது. சம்பவத்தின்போது பூவை ஜெகன்மூர்த்தியும், ஜெயராமும் சந்தித்துள்ளனர். அதற்கு ஆதாரங்கள் உள்ளன. வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது. தனது அலுவலக கார் கடத்தலில் பயன்படுத்தப்பட்டது என்பதை கூடுதல் டி.ஜி.பி.ஜெயராம் மறுக்கவில்லை. பூவை ஜெகன்மூர்த்திக்கும், கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமிற்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்கப்பட வேண்டியது உள்ளது. எனவே, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என வாதாடினார்.


இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'சிறுவன் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட மகேஸ்வரி என்பவர் அளித்த வாக்குமூலம் மற்றும் செல்போன் உரையாடல்களில் இருந்து இந்த சம்பவத்தில் மனுதாரருக்கு தொடர்பு உள்ளது என்பதற்கு ஆரம்பகட்ட முகாந்திரங்கள் உள்ளன. மனுதாரரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என உத்தரவிட்டார். ஜெகன்மூர்த்தி மனு தள்ளுபடியான நிலையில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு ஆனதாக சொல்லப்படுகிறது. ஜெகன்மூர்த்தியை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Trending News

Latest News

You May Like