புல்வாமா தாக்குதல் தினம் அனுசரிப்பு..! உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி..!

கடந்த 2019ம் ஆண்டு பிப்., 14ம் தேதி மாலை 3.15 மணிக்கு காஷ்மீரில் மோசமான பயங்கரவாத தாக்குதல் நடந்தது. ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற கான்வாய் மீது, காரில் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி, தனது காரை மோதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான்.
இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது இந்தியாவையும், பாதுகாப்பு படையினரையும் பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இன்று புல்வாமா தாக்குதல் நடந்த நினைவு தினம். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது:
இந்த நாளில், புல்வாமாவில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்துகிறேன். ஒட்டுமொத்த மனித இனத்தின் மிகப்பெரிய எதிரி பயங்கரவாதம், அதற்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் ஒன்றுபட்டுள்ளது.
சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆகட்டும், வான்வழித் தாக்குதலாகட்டும், பயங்கரவாதிகளுக்கு எதிராக 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' கொள்கையுடன் பிரசாரத்தை நடத்தி, பயங்கரவாதிகளை முற்றிலுமாக அழிப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: புல்வாமா தாக்குதலின் போது, தங்கள் உயிரை தியாகம் செய்த சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.
நமது நாட்டைப் பாதுகாக்கவும், காஷ்மீரில் அமைதி மற்றும் வளர்ச்சியை உறுதி செய்யவும் கடுமையான சவால்களைத் தொடர்ந்து எதிர்கொண்டு போராடும் சி.ஆர்.பி.எப்., வீரர்களின் மனப்பான்மைக்கு வணக்கம் செலுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2019ம் ஆண்டு புல்வாமாவில் நாம் இழந்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தியாகத்தையும், தேசத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்பையும் வரும் தலைமுறையினர் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.