புதுச்சேரி பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்புக் கல்லூரிகளாக உள்ள அரசு, அரசு சார்பு மற்றும் தனியார் கல்லூரிகளில் முதலாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்று (பிப்.6) மொழிப்பாடம் தேர்வு நடக்க இருந்தது. இதற்காக, தமிழ், ஹிந்தி, பிரெஞ்சு ஆகிய பாடங்களுக்கு தேர்வு எழுத புதுச்சேரி முழுவதிலும் இருந்து முதலாண்டு படிக்கும் 7500 மாணவ, மாணவிகள் வந்தனர்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இருந்து தேர்வுத்தாள்கள் வந்தன. தேர்வுகள் தொடங்கியவுடன் தமிழ், ஹிந்தி, பிரெஞ்சு மொழி பாடத்துக்கு விண்ணப்பித்தோருக்கு அவர்களுக்கு கேள்வித்தாள்களை கல்லூரிகளில் விநியோகித்தனர். கேள்வித்தாள்களை பார்த்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். முதலாம் ஆண்டு கேள்வித்தாள் இல்லை என தேர்வுக்கூடத்தில் கண்காணிப்பு பணியில் இருந்த ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.
அதையடுத்து அவர்கள் கல்லூரி முதல்வர்களிடம் குறிப்பிட்டனர். அதைத்தொடர்ந்து பல கல்லூரிகளில் இருந்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்த்துக்கு புகார்கள் வந்தன. தேர்வு எழுதாமல் மாணவ, மாணவிகள் ஒன்றரை மணி நேரம் வரை காத்திருந்தனர். அதைத்தொடர்ந்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்வுகட்டுப்பாட்டு பிரிவானது இத்தேர்வை ஒத்திவைப்பதாக அறிவித்து அனைத்து கல்லூரிகளுக்கும் மெயில் அனுப்பியது. தேர்வு தேதி பின்னர் அறிவிப்போம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
தேர்வு அறையில் காத்திருந்த மாணவர்களுக்கு தவறான கேள்வித்தாள் வழங்கப்பட்டதை அடுத்து, மொழிப்பாட தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், சுமார் 7,500 மாணவர்கள் தேர்வு எழுதாமல் திரும்ப சென்றனர்.