டெல்லி சென்றார் புதுவை அமைச்சர் நமசிவாயம்..!

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில் புதுச்சேரி மாநில டெல்லி பிரதிநிதியும், முன்னாள் அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் மணிவிழா வியாழக்கிழமை நடந்தது. இவ்விழாவில் பங்கேற்க முதல்வர் ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலரும் ஆந்திரம் அருகேயுள்ள புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்துக்குச் சென்றுள்ளனர்.
பா.ஜ.க.வுக்கு மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகள் விழுந்த இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஏனாமும் ஒன்று. நேற்று நடந்த மணிவிழாவில் அனைவரும் பங்கேற்றிருந்தனர். அப்போது பா.ஜ.க. தலைமையிடம் இருந்து அமைச்சர் நமசிவாயத்துக்கு திடீர் அழைப்பு வந்தது. அவரை உடனே டெல்லி வரும்படி கட்சித்தலைமை அறிவுறுத்தியது.
இதையடுத்து அமைச்சர் நமசிவாயம் ஏனாமிலிருந்து அருகில் உள்ள ராஜமுந்திரி விமான நிலையம் வழியாக விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் புதுவை உள்துறை அமைச்சராக நமச்சிவாயம் நீடிக்கிறார். இந்நிலையில் அவரை கட்சித்தலைமை அழைத்துள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.