இன்று புதுச்சேரி பா.ஜ.க. தலைவராகிறார் ராமலிங்கம்..!

புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக இருந்த வி.பி.சிவகொழுந்துவின் சகோதரரான வி.பி.ராமலிங்கம், கடந்த 2019-ல் இருந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்தார். அதன் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றிக்காக பணியாற்றிய இவர் 2021-ம் ஆண்டு மே 11-ம் தேதி நியமன சட்டமன்ற உறுப்பினாக தேர்வு செய்யப்பட்டார்.
அதன் பிறகு கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய அவர் கடந்த 27-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் பா.ஜ.க. புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அதிகாரி அகிலனிடம் மனு தாக்கல் செய்தார்.
மனு தாக்கலின் போது மேலிட பார்வையாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் அமைச்சர் சாய்.சரவணன் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான் குமார், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யாததால் வி.பி.ராமலிங்கம் புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகிறார். இன்று முறைப்படி அறிவிப்பு வெளியாகிறது.