பொதுமக்கள் சோகம்..! முடிவுக்கு வரும் கொல்கத்தாவின் அடையாளம்!
டிராம் போக்குவரத்து 1873-ம் ஆண்டு கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மேற்குவங்க அரசு சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.கூட்ட நெரிசல் இல்லாமல் ஊரை சுற்றிப்பார்க்க பலரும் இதில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவார்கள். நீண்ட நாட்களாக இந்த டிராம் போக்குவரத்து இயங்கி வருவதால் இதனை கொல்கத்தாவின் அடையாளமாகவே இதனை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், பழமையான இந்த டிராம் போக்குவரத்தை மேம்படுத்த ஆகும் செலவுகள், பராமரிப்பு கஷ்டங்கள், பழமையான கட்டமைப்பு, குறைந்து வரும் பயணிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இதனை நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பழமையான இந்த டிராம் போக்குவரத்தை பாரம்பரிய காரணங்களுக்காக மேலும் இயக்க நகரின் முக்கிய பகுதியான மைதான் முதல் எஸ்பிலேனேட் வரை 4 கிமீ தூரம் வரை இயக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்னேஹாசிஸ் கூறியதாவது:- டிராம்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் டிராம் சேவையை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது.
நெரிசலுக்கு டிராம்களை மட்டுமே குறை சொல்வது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல என்றும், இதனை மேம்படுத்தி மீண்டும் டிராம் சேவையை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.