பொதுமக்கள் 10 நாட்கள் சிரிக்கக் கூடாது.. அரசு அதிரடி உத்தரவு..!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் இல் உயிரிழந்து பத்து ஆண்டுகள் ஆன நிலையில், இந்த 10-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மது அருந்துவதற்கும், சிரிப்பதற்கும் அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1948-ம் ஆண்டு வடகொரியாவை உருவாக்கியவர் கிம் இல் சங். இவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நாட்டை ஆண்டு வந்தார். கடந்த 1994-ம் ஆண்டு இவர் இறந்த பிறகு, அவருடைய மூத்த மகன் கிம் ஜாங் இல் அதிபரானார்.
இவர் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி உயிரிழந்ததால், அவருடைய மூன்றாவது மகனான கிம் ஜாங் உன் தற்போது வடகொரியாவை மூன்றாவது தலைமுறையாக ஆண்டு வருகிறார்.
இந்நிலையில், கிம் ஜாங் இல்-லின் 10-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, பொதுமக்கள் மதுபானம் அருந்துவதற்கும், சிரிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லை நகரமான சினுய்ஜு-வைச் சேர்ந்த வட கொரியர் ஒருவர் ஊடகத்திடம் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் அவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் அவருடைய நினைவு தினத்தில் 10 நாட்கள் துக்க நாட்களாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த துக்க காலத்தில் பொதுமக்கள் மது அருந்தக் கூடாது. கடந்த காலங்களில் அப்படி மது அருந்தி பிடிபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, குற்றவாளிகளாக நடத்தப்பட்டனர்.
ஆனால், அவர்கள் எங்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது தெரியவில்லை. இன்று வரை அவர்களை மீண்டும் பார்க்கவில்லை. இந்த துக்க காலத்தில், பொதுமக்களின் குடும்ப உறுப்பினர் யார் இறந்தாலும் சத்தமாக அழக்கூடாது. அதே போன்று, பிறந்தநாள் கொண்டாட முடியாது என்று கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்களாக மட்டுமே இந்த துக்க நாட்கள் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு கிம் ஜாங் இல்-லின் 10-வது ஆண்டு நினைவு தினம் என்பதால் ஒருநாள் அதிகரிக்கப்பட்டு, 11 நாட்கள் துக்க நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.