பொதுமக்கள் ஷாக்..! ஆம்னி பஸ் டிக்கெட் விலை இரு மடங்கு உயர்வு..!
சென்னையில் இருந்து இன்று புறப்படும் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் இருமடங்கு வரை அதிகரித்து உள்ளது.
அதாவது, சாதாரண நாட்களில் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ரூ.650 முதல் ரூ.1500 வரை கட்டணம் இருக்கும் ஆம்னி பஸ்களில், தொடர் விடுமுறை நாட்களில் ரூ.1,500-க்கு குறைந்து டிக்கெட் கட்டணம் இல்லை. சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல ரூ.1,300 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், நெல்லையில் இருந்து சென்னைக்கு வர ரூ.1,500 முதல் 2,000 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண நாள்களில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களில் ₹1500 வசூலிக்கப்படும் என்றால், அது தற்போது ₹4000 வரை உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
அதிலும் சில பஸ்களில் இருமடங்கை தாண்டியே டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அந்த பஸ்களிலும் இருக்கைகள் ஓரளவுக்கு நிரம்பி, குறைந்த அளவிலேயே காலி இடங்கள் இருக்கின்றன. எவ்வளவு கட்டணம் என்றாலும், எப்படியாவது ஊருக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கில் ஆம்னி பஸ்களில் பயணிப்பவர்கள் பயணிக்கத்தான் செய்கிறார்கள்.
இதனால் விடுமுறைக் காலங்களில் அரசு விரைவு பஸ்களை அதிக அளவில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.