தீபாவளி முடிந்த கையோடு பொது தேர்வு அட்டவணை வெளியாகுமா ?அமைச்சர் அன்பில் மகேஷ் சொல்வதென்ன..!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொது தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகின்றது. நாடாளுமன்ற பொதுத்தேர்தலால் பொது தேர்வு முன்கூட்டியே நடக்குமா? அல்லது தேர்தல் முடிந்த பிறகு நடக்குமா? என்ற குழப்பம் பள்ளி மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர் மத்தியிலும் நிலவி வருகிறது.
இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் நாடாளுமன்ற தேர்தல் வருவதால் பள்ளி மாணவர்களுக்கான பொது தேர்வு எப்போது நடைபெறும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் அளித்த அவர் "தேர்தல் எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதற்கு முன்பாக ஜே.இ.இ தேர்வு ஏப்ரல் மாதம் முதல் இரண்டு வாரத்தில் நடைபெறுகிறது. பள்ளி மாணவர்களுக்கான செய்முறை தேர்வு முடிந்த பிறகு சிறிய கால இடைவெளிக்குப் பிறகு எழுத்து தேர்வு நடத்த வேண்டும்.
எனவே பொது தேர்வுக்கான தேதி முன் கூட்டியே வழங்கினால்தான் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக சரியாக இருக்கும். இதனால் தீபாவளி முடிந்த கையோடு பள்ளி மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியிடப்படும்" என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.