இன்று மாலை 4.08 மணிக்கு விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்..!
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் புரோபா-3 என்று பெயரிடப்பட்ட இணை செயற்கைகோளை (2 செயற்கை கோள்கள்) உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைகோள்கள் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளமான, ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று புதன் கிழமை மாலை 4.08-க்கு மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.
இந்த 2 செயற்கைகோள்களையும், முதலில் குறைந்தபட்சம் 600 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகப்பட்சம் 60 ஆயிரத்து 530 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுவட்ட பாதையிலும் நிலை நிறுத்தி, பின்னர் இணை சுற்றுவட்ட பாதையில் இஸ்ரோ நிலை நிறுத்தும்.
ராக்கெட்டுக்கான எரிபொருட்கள் நிரப்பப்பட்ட நிலையில், இறுதிக்கட்ட பணியான கவுண்ட்டவுன் 25 மணி நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது நேற்று பகல் 3.08 மணிக்கு தொடங்கியது.
இதனை முடித்துக்கொண்டு இன்று மாலை 4.08 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது. ராக்கெட் மற்றும் செயற்கைகோள்களின் நிலையை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
.png)