பி.எஸ்.ராகவன் ஐ.ஏ.எஸ். சென்னையில் காலமானார்..!

சென்னை பூந்தமல்லியில் பிறந்த பி.எஸ்.ராகவன், மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பல்வேறு அரசுப் பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 1961- ஆம் ஆண்டு தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவின் செயலாளராகப் பொறுப்பேற்று முன்னாள் பிரதமர்களான நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோருடன் பணியாற்றியுள்ளார்.
டெல்லியில் மத்திய உணவுத்துறையின் கூடுதல் செயலாளராக இருந்த போது தமிழ்நாட்டுக்கு தேவையான அரிசி கிடைப்பதற்கு உதவினார் அதைத் தொடர்ந்து, கடந்த 1987- ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வுப் பெற்ற பி.எஸ்.ராகவன் சென்னை அடையாறில் குடியேறினார். ஆங்கில நாளிதழின் ஆலோசகராகப் பணியாற்றிய பி.எஸ்.ராகவன், பல்வேறு தமிழ் நாளிதழ்களிலும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
அதேபோல், நேரு முதல் நேற்று வரை உட்பட பல நூல்களை பி.எஸ்.ராகவன் எழுதியுள்ளார். இந்த சூழலில், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பி.எஸ்.ராகவன் நேற்று (ஏப்ரல் 10) காலமானார்.