1. Home
  2. தமிழ்நாடு

ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடியை கண்டித்து சென்னையில் ஏப்ரல் 16ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் .!

Q

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிக்கை:
அறிவின் உருவாய், ஆற்றலின் வடிவமாய், தாய்மைக்கு இலக்கணமாய்த் திகழ்பவர்கள் பெண்கள். இத்தகைய போற்றுதலுக்கும், பெருமைக்கும் உரிய பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில், தி.மு.க., அரசின் வனத் துறை அமைச்சர் பொன்முடி, சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சைவ மற்றும் வைணவ சமயங்களின் குறியீடுகளை தொடர்புபடுத்தி பெண்களை எவ்வளவு கொச்சையாக பேசமுடியுமோ, அந்த அளவுக்கு கொச்சைப்படுத்திப் பேசி இருக்கிறார்
ஒரு மனிதனின் மனதில் இருக்கவே கூடாத குரூர வக்கிரத்தின் உச்சம், அவருடைய பேச்சில் வெளிப்பட்டிருக்கிறது. அரசியல் மேடைகளில் நாகரிகத்தை முழுமையாக அழித்து, அநாகரிகத்தைப் புகுத்தி வளர்த்த கட்சி என்றால் அது தி.மு.க., அந்தக் கட்சியினுடைய பல பேச்சாளர்கள் அரசியல் தலைவர்களை மட்டுமின்றி, மிகமிக அநாகரிகமாக பெண்களையும், சமயங்களையும், பல்வேறு சமய நம்பிக்கை கொண்ட மக்களையும் தொடர்ச்சியாக கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி பேசி வருகிறார்கள்.
தரக்குறைவாக பேசும் பேச்சாளர்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அமைச்சர் பொன்முடி வக்கிரத்தின் உச்சிக்கே சென்று பேசியிருக்கின்ற இந்த இழிவான கருத்துகள், தமிழக மக்களின், குறிப்பாக பெண்களின் நெஞ்சங்களில் நெருப்பைக் கொட்டி இருக்கிறது. பொன்முடியின் இத்தகைய கீழ்த்தரமான பேச்சுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக, பொன்முடி உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர். அவரது அநாகரிகமான பேச்சு பொதுமக்களிடையே மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
பெண்களின் மனங்களையும், மக்களின் மனங்களையும் புண்படுத்தியும், கீழ்த்தரமான முறையில் ஆபாசமாகப் பேசி இருக்கின்ற தி.மு.க., அரசின் அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து அ.தி.மு.க., மகளிர் அணி சார்பில், வரும் ஏப்ரல் 16ம் தேதி காலை 10 மணியளவில், சென்னை, சைதாப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு இ.பி.எஸ்., தெரிவித்து உள்ளார்.

Trending News

Latest News

You May Like