வெடித்த எதிர்ப்பு..! இனி ரயில் இன்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்கக்கூடாது..!

திருவனந்தபுரம் மண்டல சீனியர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் வெளியிட்ட சுற்றறிக்கையில், 'பணிக்கு வரும் போதும், பணி முடிந்து போகும் போதும், ரயில் பைலட்டுகள், இளநீர், குறிப்பிட்ட வகை பழங்கள், இருமல் மருந்துகள், குளிர் பானங்கள் மற்றும் வாய் புத்துணர்ச்சியூட்டிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்,' என்று குறிப்பிட்டிருந்தார்.
ரயில் இன்ஜின் டிரைவர்களிடம் ஆல்கஹால் பரிசோதனை செய்யும் கருவியின் மூலம் சோதனை செய்யும் போது, அவர்களின் உடலில் ஆல்கஹாலின் அளவு அதிகரித்து காணப்பட்டுள்ளது. ஆனால், ரத்த பரிசோதனையில் அதுபோன்று ஏதும் தென்படவில்லை. இது பற்றி கேட்டால், ரயில் இன்ஜின் டிரைவர்கள், தாங்கள் இளநீர், பழங்கள், இருமல் மருந்து, குளிர் பானங்கள் சாப்பிட்டதாக வெவ்வேறு காரணங்களை கூறுகின்றனர். வாய் புத்துணர்ச்சியூட்டி பயன்படுத்தியதாகவும் கூறுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாத நிலையில், ரயில் இன்ஜின் டிரைவர்களுக்கு மேற்கண்ட கட்டுப்பாடுகளை விதித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு ரயில் இன்ஜின் டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆல்கஹால் பரிசோதனை கருவிகளில் கோளாறு நிலவும் நிலையில், அதற்கு தீர்வு காணாமல் மாற்றாமல், ரயில் இன்ஜின் டிரைவர்கள் சாப்பிடுவதில் கட்டுப்பாடு விதிக்கலாமா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். மேலும், இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.