1. Home
  2. தமிழ்நாடு

திருநெல்வேலி - தூத்துக்குடி சாலையில் தொடரும் போராட்டம்..!

Q

நெல்லையை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இந்த தம்பதிக்கு சுர்ஜித் (வயது 24) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சரவணனும், கிருஷ்ணகுமாரியும் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதற்கு முன் சரவணனின் குடும்பத்தினர் தூத்துக்குடியில் வசித்து வந்தனர். அப்போது அவரது மகள் படித்த பள்ளிக்கூடத்தில் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின்குமார் (வயது 26) படித்துள்ளார்.
அப்போது, பள்ளியிலேயே 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த கவின்குமார் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து, கவின்குமார் அடிக்கடி ஏரலில் இருந்து பைக்கில் பாளையங்கோட்டைக்கு சென்று தனது காதலியை சந்தித்து பேசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று மதியம் கவின்குமாரின் தாத்தாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே, கவின்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் தாத்தாவை அழைத்துக்கொண்டு பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர்.
இதனை எப்படியோ கவின்குமார் காதலியின் தம்பி சுர்ஜித் அறிந்துகொண்டார். இதற்கிடையே தாத்தாவிற்கு சிகிச்சை முடிந்ததும் கவின்குமார் சொந்த ஊருக்கு செல்வதற்காக மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு தயாராக நின்று கொண்டிருந்த சுர்ஜித், கவின்குமாரை பேச அழைத்துள்ளார். அப்போது, திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுர்ஜித் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவின்குமாரை சரமாரி வெட்டிவிட்டு தப்பிஓடினார். இதில் படுகாயம் அடைந்த கவின்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கொல்லப்பட்ட கவின்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் கவின்குமாரை வெடிக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய சுர்ஜித்தை கைது செய்துள்ளனர். காதல் விவகாரத்தில் நெல்லையில் பட்டப்பகலில் ஐ.டி. ஊழியர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலை சம்பவத்தில் இளம்பெண்ணின் பெற்றோரான சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வரும் சரவணனும், கிருஷ்ணகுமாரிக்கும் தொடர்பு இருப்பதாக உயிரிழந்த கவின்குமாரின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 பேரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலை முக்காணியில் கவினின் உறவினர்கள் மறியம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டு வருகிறது.
100-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரதான சாலையில் அதிகப்படியாக வாகனங்கள் செல்வது வழக்கம் . இந்த போராட்டத்தால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இந்த நிலையில் அந்த சாலை வழியாக வரும் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

Trending News

Latest News

You May Like