1. Home
  2. தமிழ்நாடு

புதுச்சேரியில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்..!

1

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

புதுச்சேரி மாநிலத்திற்கு இதுநாள்வரையிலும் மாநில அந்தஸ்து வழங்காதது; மத்திய நிதிக் குழுவில் புதுச்சேரி மாநிலத்தை இணைக்காதது; மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்காதது

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் அனைத்து வேலை வாய்ப்புகளிலும் புதுச்சேரிக்கென உரிய இடஒதுக்கீடு வழங்காதது முதலானவற்றிற்குக் காரணமான மத்திய அரசைக் கண்டித்தும்;

புதுச்சேரியை ஆளும் அரசு, ரேஷன் கடைகளைத் திறக்காதது; பொது விநியோகத் திட்டத்தை அமல்படுத்தாதது; அரசு சார்பு நிறுவனங்களை படிப்படியாக மூடியது; உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதது

தாழ்த்தப்பட்ட மக்களுக்குரிய சிறப்புக் கூறு நிதியை முறையாக செயல்படுத்தாதது; மீனவர்களுக்கு உரிய உள்ஒதுக்கீடு வழங்காதது; இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க IT பார்க் உள்ளிட்ட புதிய தொழிற்சாலைகளைக் கொண்டுவராதது

அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படாதது; சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படாதது; மூடப்பட்டுள்ள அரசு பஞ்சாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்காதது

மின் துறையை தனியார்மயமாக்கும் பிரச்சனை; மின் கட்டணம் வசூலிப்பதில் Prepaid Meter System கொண்டுவரப்படுவது; ஸ்மார்ட் சிட்டி பணிகளில் குளறுபடிகள், அரசின் தவறான விவசாயக் கொள்கை முடிவு உள்ளிட்ட மாநிலம் சம்பந்தமான பல்வேறு பிரச்சனைகளில் பாராமுகமாக இருந்து வருவதைக் கண்டித்தும் புதுச்சேரி மாநில மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு அனைத்துத் திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றித் தர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக புதுச்சேரி மாநிலத்தின் சார்பில், 10.2.2024 – சனிக் கிழமை காலை 10 மணியளவில்

புதுச்சேரி கடலூர் சாலை AFT மைதானத்தில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு மறைமலையடிகள் சாலை, அண்ணாசாலை, நேரு வீதி வழியாக சட்டமன்றப் பேரவை அருகில் சென்றடைந்து, அங்கே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தப் பேரணி மற்றும் கண்டன அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. C.Ve. சண்முகம், M.P., அவர்கள் தலைமையிலும்; புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளர் திரு. A. அன்பழகன், Ex. M.L.A., அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தப் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்.

மத்திய அரசைக் கண்டித்தும், புதுச்சேரி மாநில அரசைக் கண்டித்தும் நடைபெற உள்ள இந்தப் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like