குஷ்புவைத் தொடர்ந்து உதயநிதியும் கைதா? அனல் பறக்கும் தேர்தல் அரசியல்!

கோவையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதய நிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற திமுகவினருக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவதூறு பரப்பும் வகையில், சுவரொட்டிகள் அதிமுகவைச் சேர்ந்த சிலர் ஒட்டியிருந்தனர்.
இதனை அ.தி.மு.க.வினரும் கிழிக்காமல் போலீசாரும் கிழிக்காமல் வேடிக்கை பார்த்ததால் - கழகத் தொண்டர்களே ஆவேசப்பட்டுப் போராடியிருக்கிறார்கள். அப்படி “பெயர் போடாமல்” “அநாகரிகமாக” எங்கள் கழகத் தலைவர் குறித்து சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்த தி.மு.க.வினர் மீதே வழக்குப் போட்டு கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
இந்த அபத்தமான நடவடிக்கை. அராஜகமான நடவடிக்கை. இதனை குனியமுத்தூர் காவல் நிலைய அதிகாரி செய்துள்ளார். அப்படி ஒரு பொய் வழக்குப் போடுவதற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டிருக்கிறார். இது சட்டவிரோதமானது என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று கண்டனம் தெரிவிருந்தார்.
இந்நிலையில், சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடத்த இளைஞரணியினர் முயன்றனர். இதற்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. இதனால், தடையை மீறி போராட்டம் நடத்த திமுகவினர் ஆயத்தமாகி வருகின்றனர்.
திருமாவளவனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொள்ள சென்ற நடிகை குஷ்புவை போலீசார் கைது செய்தனர். விரைவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர், மக்களின் கவனத்தை ஈர்க்க போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடத் துவங்கி விட்டனர். கொரோனா பயமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி விட்டதும், தற்போது, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு மக்களை கவர நினைக்கின்றனர். குஷ்புவைத் தொடர்ந்து திமுக சார்பில் உதயநிதியும், அனுமதி கிடைக்காவிட்டாலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் வருவதற்குள் தமிழக மக்கள் இன்னும் எத்தனைப் போராட்டங்களையு, ஆர்ப்பாட்டங்களையும் பார்க்க நேரிடுமோ என்று புலம்பி வருகின்றனர்.