1 கோடி மதிப்புள்ள பொருள் திருட்டு... அது நகையோ வைரமோ இல்ல... "தலைமுடி"...

கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரு, லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடரமணா, 73. தலைமுடிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். தலைமுடிகளை சேமித்து வைக்க, லட்சுமிபுரத்தில் சிறிய கிடங்கும் வைத்துள்ளார்.
கடந்த மாதம் 28ம் தேதி இரவு கிடங்கின் இரும்புக் கதவை உடைத்து உள்ளே புகுந்த ஆறு மர்ம நபர்கள், கிடங்கிற்குள் 27 மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த, தலைமுடிகளை திருடி, ஜீப்பில் எடுத்துச் சென்று விட்டனர். வெங்கடரமணா புகாரின்படி, சோழதேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வெங்கடரமணா கூறுகையில், ''வெளிநாடுகளில் நம்ம ஊர் தலைமுடிக்கு அதிக மவுசு உள்ளது. முடியை பயன்படுத்தி, 'விக்' தயாரிக்கின்றனர். ''முதலில், ஹெப்பாலில் தான் கிடங்கு இருந்தது. 20 நாட்களுக்கு முன் தான் இங்கும் கிடங்கு திறந்தேன். கிடங்கிலிருந்து 830 கிலோ எடை கொண்ட, தலை முடிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
''திருடப்பட்ட தலைமுடியின் மதிப்பு வெளிநாட்டு சந்தைகளில் 80 லட்சம் முதல், 1 கோடி ரூபாய் வரை இருக்கும். தலைமுடிகளை திருடி சென்றவர்கள் தெலுங்கில் பேசி உள்ளனர். ''இதை பக்கத்து கடையை சேர்ந்த ஒருவர் கவனித்து உள்ளார். அவர்கள் முடியை இங்கிருந்து எடுத்துச் செல்ல வந்தனர் என்று நினைத்துள்ளார். திருட வந்ததாக நினைக்கவில்லை,'' என்றார்