இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்காது ?

13வது ஐசிசி 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. சென்னை, மும்பை, டெல்லி, அகமதாபாத், பெங்களூரு என நாட்டின் பல்வேறு நகரங்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு நாடுகளின் அணிகள் பங்கேற்க உள்ளன. போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள போட்டியில் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா மோத உள்ளன. இதனிடையே, இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்குமா? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
முன்னதாக ஆசிய கோப்பை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரை நடத்தும் நாடாக பாகிஸ்தான் இருந்த நிலையில், இந்திய அணி, பாகிஸ்தான் நாட்டிற்கு பயணம் செய்வது தொடர்பாக குழப்பம் ஏற்பட்டது. இந்தியா அணி, பாகிஸ்தான் சென்று கடைசியாக விளையாடியது 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியில் தான்.
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லவே இல்லை. இந்நிலையில், பாகிஸ்தான் செல்ல பிசிசிஐ மறுப்பு தெரிவித்து வந்ததால் பாகிஸ்தானுடன் இலங்கையிலும் போட்டி நடைபெறும். இந்தியா விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சர் இஷான் மசாரி இந்த விவகாரம் குறித்து முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, “என்னுடைய தனிப்பட்ட கருத்தின் படி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எனது அமைச்சகத்தின் கீழ் வருகிறது.
ஒருவேளை, ஆசிய கோப்பை போட்டி விளையாட பொது இடத்தை இந்தியா வலியுறுத்தினால் நாங்களும் உலகக் கோப்பை விளையாட இந்தியாவுக்கு வர மாட்டோம். ஆசிய கோப்பையை நடத்தும் நாடு பாகிஸ்தான். எங்களுக்கு அனைத்து போட்டிகளையும் பாகிஸ்தானில் நடத்தும் உரிமை உள்ளது. எங்களுக்கு ஹைபிரிட் மாடல் முறை வேண்டாம்” என்றுள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது குறித்து முடிவெடுக்க அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் உயர் மட்ட குழு ஒன்றை அமைத்துள்ளார். அதில் விளையாட்டு துறை அமைச்சரும் இடம் பெற்றுள்ளார். இந்த பின்னணியில் தான் அமைச்சர் இந்த கருத்தை பகிர்ந்துள்ளார்.