1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுவதில் சிக்கல் ?

1

கர்நாடகாவில் ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பமாகியும் தென்மேற்கு பருவமழையும் ஆரம்பமாகவில்லை. எதிர்ப்பார்த்த அளவுக்கு மழை பொழியாததால் காவிரி, கபிலா, ஹேமாவதி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து குறைவாக உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,249 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. இதனால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்ணாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி, 124.80 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் 78.58 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் நீர்மட்டம் 110.64 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 1999-ம் ஆண்டு நிலவிய வறட்சியின் காரணமாக ஜூலை மாதத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் கீழே குறைந்தது. 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு அந்த ஆணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் கீழே இருப்பது கர்நாடக விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கர்நாடக மாநிலத்தில் வழக்கமாக பொழியும் மழையின் அளவை விட இந்த ஆண்டு 38 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது'' எனத் தெரிவித்துள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையைப்‍ போலவே கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளிலும் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தாமதமாகி வருவதால் இந்த அணைகளுக்கு நீர்வரத்தும் குறைவாகவே வந்து கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை திறப்பதிலும் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தர‌வின்படி ஜூன் மாதத்தில் காவிரியில் தமிழகத்துக்கு 12.213 டிஎம்சி நீர் வழங்க‌ வேண்டும். ஆனால் கர்நாடக அரசு 2.993 டிஎம்சி நீரை மட்டுமே வழங்கியது. இதனால் தமிழக அரசு காவிரியில் ஜூன் மாதத்தில் வழங்க வேண்டிய 9.2 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு வழங்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like