விஜய் சேதுபதி படத்திற்கு சிக்கல்!

விஜய் சேதுபதி நடித்துள்ள க/பெ.ரணசிங்கம் திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள க/பெ.ரணசிங்கம் திரைப்படம் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்தத் திரைப்படத்தின் கதை, தனது தூக்கு கூடை என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து திருடப்பட்டது என்று மிடறு முருகதாஸ் என்பவர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பிழைப்பு தேடி வெளிநாடு செல்லும் தொழிலாளர்களின் அவல நிலையை மையப்படுத்தி, தான் எழுதியிருந்த தவிப்பு என்ற சிறுகதையை திருடி, விருமாண்டி என்பவர் க.பெ.ரணசிங்கம் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்திருப்பதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே விருமாண்டி மீது குற்ற நடவடிக்கை எடுக்குமாறு, மிடறு முருகதாஸ் தனது புகாரில் கோரியுள்ளார். க/பெ ரணசிங்கம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் கதை திருட்டு புகார் அளிக்கப்பட்டிருப்பது அந்தப்படத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in