1. Home
  2. தமிழ்நாடு

யார் 200 பேரை உறுப்பினர்களாக சேர்க்கிறார்களோ அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் - தமிழிசை சவுந்தரராஜன்..!

1

பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை பணி 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதில் புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். அத்துடன் ஏற்கெனவே கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், தங்களது உறுப்பினர் பதிவை புதுப்பித்துக் கொள்வார்கள். அந்தவகையில், நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை பணி கடந்த 2-ம் தேதி தொடங்கியது. டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி, முதல் நபராக தனது உறுப்பினர் பதிவை புதுப்பித்துக்கொண்டார்.

தமிழகத்தில் சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா, முதல் நபராக தனது உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக் கொண்டார். அக்டோபர் 15-ம் தேதி வரை நடைபெறும் இந்த உறுப்பினர் சேர்க்கை பணியில் 1 கோடி உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து, அதற்கான பணிகளை தமிழகத்தில் பாஜகவினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளுடன், உறுப்பினர் சேர்க்கை தொடர்பான இணைய வழி ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கலந்து கொண்டு, மாநில, மாவட்ட, மண்டல, கிளை தலைவர்கள், அணி பிரிவு மற்றும் நிர்வாகிகளுக்கு பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார். குறிப்பாக, பூத் அளவில் வீடு வீடாகச் சென்று பாஜக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி, அதிகமான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் 200 பேரை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், “சிறுபான்மையினர் மற்றும் அனைத்து சாதியினரும் பாஜகவில் உறுப்பினர்களாக இடம் பெற வேண்டும். தென் சென்னை தொகுதியில், எந்த பூத்தில், யார் முதலில் 200 பேரை உறுப்பினர்களாக சேர்க்கிறார்களோ, அல்லது 200-க்கும் மேற்பட்டோரை சேர்க்கிறார்களோ அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்” என தமிழிசை தெரிவித்துள்ளார். இதனால், உற்சாகமடைந்த நிர்வாகிகள், உறுப்பினர் சேர்க்கை பணியில் மும்முரமாக களமிறங்கி உள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சாய் சத்யன், தென் சென்னை மாவட்ட தலைவர் காளிதாஸ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Trending News

Latest News

You May Like