தனியார் பள்ளி வாயுக்கசிவில் திடீர் திருப்பம்..! மாணவிகள் மீது சந்தேகம் எழுப்பிய போலீசார்..!
திருவொற்றியூரில் உள்ள விக்டரி என்ற தனியார் மேல்நிலைப் பள்ளியில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. 2 முறை நிகழ்ந்த இந்த சம்பவத்தின் எதிரொலியாக 45க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்களுக்கு உரிய சிகிச்சையும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து இதே சம்பவங்கள் அரங்கேற பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். பலகட்ட சோதனைகளுக்கு பின்னர் பள்ளியில் வாயுக்கசிவு ஏற்பட சாத்தியமில்லை என்று அறிவித்தனர். இந் நிலையில் பள்ளியிலும் மாணவிகள் மத்தியிலும் நடத்தப்பட்ட விசாரணை பற்றிய தகவல்கள் போலீசார் கூறி உள்ளனர். அவர்கள் தெரிவித்துள்ளதாவது;
அக்டோபர் 25ம் தேதி முதலில் 45 மாணவிகள் உடல்நிலை பாதிப்படைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விக்டரி பள்ளியில் வேதியியல் ஆய்வகத்தில் இருந்து வாயு கசிந்ததால் அவர்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அதன் பின்னர் நவம்பர் 4ம் தேதி மேலும் 10 மாணவிகள் மயக்கம், வாந்தி வருவதாக கூறவே அவர்களும் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். மாணவிகளின் நிலையைக் கண்டு பெற்றோர் கடும் அதிருப்தி அடைந்து போராட்டத்திலும் குதித்தனர்.
நடந்த சம்பவத்தை அறிந்து, நாங்களும் விசாரணையை துவக்கினோம். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உரிய கள ஆய்வை நடத்தி உள்ளது. பள்ளியிலும், சரி அதன் சுற்றுப்புறத்திலும் உள்ள ஆலைகளில் இருந்து எங்கும் வாயுக்கசிவு ஏற்பட வில்லை என்பது தெரிய வந்தது.
எங்களின் சந்தேகம் எல்லாம் மாணவிகள் மீது திரும்பி இருக்கிறது. பள்ளி பாட வேளைகளை புறக்கணிக்க மாணவிகள் ஒன்றாக சேர்ந்து இதுபோன்று நாடகம் ஆடி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு போலீசார் கூறி உள்ளனர்