தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து; 12 குழந்தைகள் காயம்.!

பரமக்குடி (Paramakudi) பகுதியில், தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அங்குள்ள சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல, பள்ளி நிர்வாகம் சார்பில் வாகன வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று காலை வழக்கம்போல பள்ளி மாணவ - மாணவிகளை அழைத்துக்கொண்டு பள்ளி பேருந்து, 12 க்கும் மேற்பட்ட மாணாக்கர்களுடன் பயணம் செய்தது.
இந்த பேருந்து கமுதி - பார்த்தீபனூர் சாலையில், தேவனூர் என்ற பகுதிக்கு அருகே வந்துகொண்டு இருந்தது. அப்போது, சாலையில் திடீரென இருசக்கர வாகன ஓட்டி வந்துள்ளார். இதனால் அவரின் மீது மோதாமல் இருக்க வேண்டி, பேருந்து ஓட்டுநர் சடன் பிரேக் அடித்துள்ளார். இதனால் பள்ளி வாகனம் நிலைதடுமாறி சாலையிலேயே கவிழ்ந்தது. இதனால் குழந்தைகள் தங்களை காப்பாற்றக்கூறி அலறினர்.
விபத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, மீட்பு பணிகளிலும் ஈடுபட்டனர். உடனடியாக நிகழ்விடத்திற்கு காவல்துறையினர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் வந்ததைத்தொடர்ந்து, காயமடைந்த 12 மாணவ - மாணவிகளும் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.