தனியார் அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் பணியாற்ற அனுமதி..!
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருவதை அடுத்து, காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM), பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டிடங்களை இடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மிக முக்கிய அரசு கட்டுமானப் பணிகளுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலில் இயங்கும் BS-III (Bharat Stage-III) 4 சக்கர வாகனங்கள், டீசலில் இயங்கும் BS-IV 4 சக்கர வாகனங்களை தேசிய தலைநகர் பிராந்தியம் (National Capital Region-NCR) மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளியில் இருந்து வரும் BS-III வகை 4 சக்கர வாகனங்களில் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் அல்லது அத்தியாவசிய சேவைகளை வழங்கும் வாகனங்களைத் தவிர பிற வாகனங்களை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்றும் காற்றத் தர மேலாண்மை ஆணையம் டெல்லி அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் மட்டுமல்லாது, அதை ஒட்டிய என்சிஆர் மாவட்டங்களான குருகிராம், ஃபரிதாபாத், காஜியாபாத் மற்றும் கௌதம் புத் நகர் ஆகிய இடங்களிலும் மாசுபடுத்தும் இத்தகைய நான்கு சக்கர வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக், சிஎன்ஜி மற்றும் டீசலில் இயங்கும் பிஎஸ்-6 வகை வாகனங்கள் தவிர அண்டை மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளும் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காற்று மாசு தீவிரமடைந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களைத் தவிர இதர வாகனங்கள் டெல்லிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு, மாநகராட்சி, தனியார் அலுவலகங்களில் 50% ஊழியர்கள் பணியாற்றவும், மீதமுள்ள ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றவும் அனுமதி. 6 முதல் 9ம் வகுப்பு வரை மற்றும் 11ம் வகுப்புக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்த டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.