1. Home
  2. தமிழ்நாடு

பிரதமர் மோடியின் அரசியல் பயணம்..!

1

குஜராத் மாநிலத்தில் ஒரு சிறிய நகரத்தில் செப்டம்பர் 17, 1950 ஆம் ஆண்டு பிறந்தார் நரேந்திர மோடி. சுமாரான வசதியும், சாதாரணப் பின்னணியும் கொண்ட குடும்பத்தில் மோடி பிறந்திருந்தாலும் அவருடையது அன்பான குடும்பம். அவருடைய இளம் வயதில் பல்வேறு சிரமங்களை சந்தித்திருந்ததால் அவருக்கு உழைப்பின் முக்கியத்துவம் தெரிந்திருந்தது. இதுவே அவருக்கு மக்கள் மற்றும் நாட்டின் சேவைக்காக தன்னை அர்ப்பணித்து கொள்வதற்கு தூண்டு கோலாக இருந்தது. தன்னுடைய ஆரம்பக் கல்வியை 'வட்நகரில்' உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய நரேந்திர மோடி , பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொழுதே, ரெயில் நிலையத்தில் டீக்கடை நடத்திவந்த தன்னுடைய தந்தைக்கு உதவிகள் பல செய்துவந்தார்.

எட்டு வயதிலேயெ, 'ஆர்.எஸ்.எஸ்' என அழைக்கப்படும் 'தேசிய தொண்டர் அணியில்' உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார். அரசியலில் அதிகம் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். இதனால், குஜராத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். சிறுவயதிலேயே 'ஆர்.எஸ்.எஸ்-ல்' தன்னை இணைத்துக்கொண்ட மோடி , 'அகில பாரதிய வித்யார்தி பரிஷத்' என்னும் மாணவர் குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றிருந்தார்.

இந்தியாவில் நெருக்கடிநிலை அமலில் இருந்த பொழுது, போராட்டங்களில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட மோடிக்கு  பல அரசியல் தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது. 'ஆர்.எஸ்.எஸ்-ன்' தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த அவர், பிறகு பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக சேர்ந்து, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச்செயலாளராக உயர்ந்தார். குறுகிய காலத்திற்குள், அத்வானியால் 1998 ம் ஆண்டு 'குஜராத்' மற்றும் 'இமாசலப் பிரதேச' தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மோடி , வெகு விரைவில், 'இமாசலப் பிரதேசம்', 'பஞ்சாப்', 'அரியானா', 'சண்டிகார்', மற்றும் 'ஜம்மு காஷ்மீர்' போன்ற ஐந்து மாநிலங்களுக்கு, 'பாரதிய ஜனதா கட்சியின்' பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

1998 -ம் ஆண்டு 'அடல் பிஹாரி வாஜ்பாய்' பிரதமராகப் பதவியேற்றபொழுது, மோடிக்கு 'தேசிய செயலாளர்' பதவி வழங்கப்பட்டது. தான் வகித்த அனைத்து பொறுப்புகளிலும் திறம்படச் செயல்பட்ட மோடி, 2001 ம் ஆண்டு அக்டோபர் 6 ம் தேதி, குஜராத் முதல்-மந்திரியாக இருந்த 'கேசுபாய் பட்டேல்' ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, 'பாரதிய ஜனதா கட்சியின்' தனிப்பெரும்பான்மை ஆதரவுடன் அக்டோபர் 7 ம் தேதி குஜராத் மாநில முதல்-மந்திரியாக பதவியேற்றார். பின்னர், 2007 -ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாக குஜராத் முதல்-மந்திரி பதவியை அலங்கரித்தார். இதனால், குஜராத் அரசியல் வரலாற்றில், நீண்டகால முதல்வராக இருந்தவர் என்ற சாதனையைப் பெற்றார். 

அரசியலைத் தவிர எழுதுவதிலும் நரேந்திர மோடி ஆர்வம் கொண்டுள்ளார். பல்வேறு புத்தகங்களையும், கவிதைகளையும் அவர் எழுதியுள்ளார். ஒவ்வொரு நாளும் அவர் தன்னுடைய நாளை யோகாவுடன் ஆரம்பிக்கிறார். பிரதமர் மோடி மே 2014ல் பிரதமராக பொறுப்பேற்றவுடன் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் அனைத்துவிதமான வளர்ச்சி கொண்ட பயணத்திற்காக வழிவகுத்தார். வரிசையில் உள்ள கடைசி நபரும் பயன்பெறும் வகையில் சேவை புரிய வேண்டும் என்ற அந்தோதையா கொள்கையைப் பிரதமர் கொண்டு வந்தார். 

2014ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் "தூய்மையான இந்தியா" இயக்கத்தை நாடு முழுவதும் துவக்கி வைத்தார். பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இரண்டாவது முறை அரசு அமைந்தபோது, சில அதிரடி நடவடிக்கைகளை கொண்டு வந்தார்.அவற்றில் முத்தலாக் மசோதா கொண்டுவந்தது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, பொதுத்துறை வங்கிகளை 12 ஆக குறைத்தது, ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி, குடியுரிமை திருத்த சட்டம்,பெண்களுக்கான இடஒதுக்கீடு, நாடாளுமன்றத்தில் அவர்களின் பங்கேற்பை மேம்படுத்துதல், புதிய நாடாளுமன்றம் திறப்பு  ஆகியவை மிக முக்கியமானவை. 

மேலும் நாட்டிலுள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதை நோக்கிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக மோடி அரசு தனித்துவமான வகையில் பிரதமர் விவசாயிகள் திட்டம் ஒன்றை தொடங்கி இதன் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டு தோறும் ரூ. 6,000 நிதியுதவியாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள 14.5 கோடி விவசாயிகள் பயனடைகின்றனர்.

நரேந்திர மோடியின் சர்வதேசக் கொள்கை நடவடிக்கைகள் உலக அரங்கில், மிகப் பெரிய குடியாட்சியின் பங்கையும் இந்தியாவின் திறனையும் நிரூபித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் இவர் வழங்கிய உரை உலகெங்கும் பாராட்டப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு பிறகு நேபாளத்திற்கும், 28 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவிற்கும், 31 ஆண்டுகளுக்கு பிறகு பிஜிக்கும் 34 ஆண்டுகளுக்கு பிறகு செஷல்ஸ்க்கும் பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 18-வது நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை 7.15 மணிக்கு நடைபெற்ற வண்ணமயமான விழாவில், நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like