1. Home
  2. தமிழ்நாடு

இன்று மாலை 4.50 மணிக்கு சென்னை வருகிறார் பிரதமர் மோடி..!

1

சென்னையில் நடைபெறும் இந்த விழாவில், கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதற்காக பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் இன்று மாலை 4.50 மணிக்கு பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமரின் வருகையையொட்டி சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இன்று டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த போட்டியானது,  இந்தாண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.  தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024-ம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

சென்னை,  கோவை,  மதுரை,  திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.  18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடத்தப்படும் இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்று (ஜனவரி 19ம் தேதி) முதல் ஜனவரி 31 வரை நடைபெற உள்ளது. கேலோ இந்தியா போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

மொத்தம் 27 வகையான பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஜனவரி 4-ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை இன்று (ஜன.19) துவக்கி வைக்கிறார்.

இப்போட்டிகளை நடத்துவது தொடர்பான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, நேற்று (ஜன.18) ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முதல்வரின் செயலர் முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, உள்துறை முதன்மைச் செயலர் பெ.அமுதா உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.

முன்னதாக தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா தொடக்க விழா நடைபெறவுள்ள சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  தொடர்ந்து தொடக்க விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும்  இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like