1. Home
  2. தமிழ்நாடு

நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..! 5 அடுக்கு பாதுகாப்புக்கு குவிக்கப்படும் போலீசார்..!

1

நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.தற்போது இங்கிலாந்தில் இருக்கும் பிரதமர், அங்கிருந்து மாலத்தீவுக்கு செல்கிறார். இந்த பயணத்தை முடித்துக்கொண்டு 26ஆம் தேதி இரவு தூத்துக்குடிக்கு வருகிறார். தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர், விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். அதேபோல மத்திய அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார்.

குறிப்பாக தஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான சோழபுரம் - சேத்தியாதோப்பு சாலையை திறந்து வைக்கிறார். ஆறு வழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ள தூத்துக்குடி துறைமுகச் சாலையையும் திறந்து வைக்கிறார். மதுரை - போடி நாயக்கனூர் இடையே மின்மயமாக்கப்பட்டுள்ள ரயில் பாதை, நாகர்கோயில் - கன்னியாகுமரி மற்றும் நெல்லை - மேலப்பாளையம் இடையேயான இரட்டை ரயில் பாதை ஆகியவற்றையும் தொடங்கி வைக்கிறார். மொத்தமாக ரூ.4518 கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு விமானம் மூலம் திருச்சி செல்லும் பிரதமர், அங்கு இரவு தங்குகிறார். மறுநாள் காலை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவரை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது. காலை 11 மணியளவில் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் செல்லும் பிரதமர், அங்கு ராஜேந்திர சோழன் ஆடி திருவாதிரை விழாவில் பங்கெடுக்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை சென்று பாஜகவின் மையக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்த பிறகு திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தூத்துக்குடி, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் அடங்கிய ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலோர காவல் படையினர் உஷார் நிலையில், ரோந்துப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையினரும் தூத்துக்குடி சென்று பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர்.

மோடி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்திலும், வழித்தடத்திலும் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. திருச்சி மாநகர காவல் துறை விமான நிலையம் மற்றும் பிற இடங்களில் 1,000க்கும் மேற்பட்ட போலீசாரை பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்த உள்ளது. கங்கை கொண்டசோழபுரம் ஜூலை 26 மற்றும் 27 தேதிகளில் பலத்த பாதுகாப்புக்கு உட்படுத்தப்படும். அரியலூர் மற்றும் மத்திய மண்டலத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சுமார் 2,000 போலீசார் பாதுகாப்பு மற்றும் வாகன இயக்கங்களை ஒழுங்குபடுத்துவதற்காக நிறுத்தப்பட உள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக 26, 27 ஆகிய தேதிகளில் திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் ட்ரோன்கள் பறக்க விடவும் மாவட்ட நிர்வாகங்கள் தடை விதித்துள்ளன.

Trending News

Latest News

You May Like