1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!

1

பிரதமர் மோடி தமிழகத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக கடந்த சனிக்கிழமை மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடிக்கு சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின்னர், இரவு 8 மணியளவில் நடந்த விழாவில், ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பின்னர் விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு, ரெயில்வே துறையில் நிறைவேற்றப்பட்ட ரூ.1,030 கோடி மதிப்பிலான பணிகள், நெடுஞ்சாலைத்துறையால் முடிக்கப்பட்டுள்ள ரூ.2 ஆயிரத்து 571 கோடி மதிப்பிலான பணிகள், ரூ.548 கோடி மதிப்பீட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4-வது பிரிவில் மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக உள்ள மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் என ரூ.4 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்கள் என பலர் கலந்து கொண்டனர். விழா முடிந்த பிறகு தனிவிமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி சென்றார். அடுத்த நாள், அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்றார்.

ரூ.1,000 மதிப்பிலான, பேரரசர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டார். இதன்பின்பு, திருச்சிக்கு ஹெலிகாப்டரில் சென்ற அவர், அதன்பின்னர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில், பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்திற்கு வருகை தருகிறார். வருகிற ஆகஸ்டு 26-ந்தேதி தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி, சிதம்பரம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளுக்கு செல்கிறார் என தகவல் தெரிவிக்கின்றது. ஆன்மீக தலங்களில் முக்கியத்துவம் பெற்ற இந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நடராஜர் கோவிலில் இருந்து மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நேரலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். ஒரு மாத இடைவெளியில் 2வது முறையாக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. 

Trending News

Latest News

You May Like