1. Home
  2. தமிழ்நாடு

தியானத்தை துவங்கினார் பிரதமர் நரேந்திர மோடி ..!

1

பாராளுமன்ற தேர்தல் முடிவடையும் நேரத்தில் பிரதமர் மோடி, ஆன்மீகத் தலங்களுக்கு சென்று தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை, தியானம் செய்வதற்கு ஏற்ற இடமாக தேர்வு செய்துள்ளார்.

இதற்காக விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக நேற்று மாலை கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். அங்கு புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி, சாமி தரிசனம் செய்தார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து படகின் மூலமாக பிரதமர் விவேகானந்தர் மண்டபத்துக்கு பிரதமர் சென்றார். அங்கு விவேகானந்தர் மண்டபத்தை முழுவதுமாக சுற்றிப்பார்த்தார். தொடர்ந்து தியான மண்டபத்துக்கு சென்று தனது தியானத்தை தொடங்கினார். பிரதமர் தியானம் செய்வதற்காக விவேகானந்தர் மண்டபத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று முதல் மூன்று நாட்களுக்கு விவேகானந்தர் மண்டபத்தில் தங்கி இரவு, பகலாக அவர் தியானம் மேற்கொள்ள உள்ளார்.

விவேகானந்தர் மண்டபத்தில் மோடி தங்குவதால் அங்கு மூன்று அறைகள் தயாராக வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு அறையில் பிரதமர் அலுவலகமும். மற்றொரு அறையில் சமையல் அறையும் மற்றொரு அறையில் பிரதமர் தங்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.. ஜூன் 1-ம் தேதி மதியம் 3 மணிக்கு திருவள்ளுவர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார். 

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

பிரதமர் மோடி 3 நாட்கள் தியானம் மேற்கொள்வது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பிரதமரின் தியானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், தி.மு.க. தேர்தல் கமிஷனில் புகார் தெரிவித்துள்ளது. மேலும் பிரதமரின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like