ஆளுநர் ரவி அறிக்கைக்குப் பதிலடி கொடுத்த அர்ச்சகர்கள்..!
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தமிழ்நாட்டில் பொதுமக்கள் கோயில்களில் வழிபாடு மேற்கொண்டனர். சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோயிலுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்து விட்டுச் சென்றார்.
இதன்பின் தமிழக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் பக்கத்தின் வாயிலாக அவர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில், ‛‛சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது.
நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது '' எனக் கூறப்பட்டிருந்தது. ஆளுநரின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அந்தக் கோயில் அர்ச்சகர்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயிலின் தலைமை அர்ச்சகர் மோகன் பட்டாச்சார்யா கூறுகையில், "எங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. ஆளுநர் வரும் நேரத்தில் தங்களை ஒரு செய்தியாளர் பேட்டி கேட்டார். ஆளுநர் வந்து சென்ற பிறகே பேட்டி அளிக்க முடியும் என்று கூறினோம். அதனைக் கருத்தில் கொண்டே நாங்கள் அச்சத்தில் இருப்பதாக ஆளுநர் அவ்வாறு கூறியிருக்கலாம், மத்தபடி எங்களுக்கு அச்சம் எதுவும் இல்லை, அச்சுறுத்தலும் கிடையாது" என்று விளக்கமளித்தார்.