இன்று முதல் விலை குறையும், உயரும் பொருட்களின் முழு விவரம்..!
விலை குறையும் பொருட்கள்:
> பால் பொருட்கள்: யு.எச்.டி பாலுக்கு இப்போது வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கன்டன்ஸ்டு மில்க், வெண்ணெய், நெய், பனீர், பாலாடைக்கட்டி உள்ளிட்ட பொருட்கள் 12%-லிருந்து 5%-ஆக குறைந்துள்ளது.
> மால்ட், ஸ்டார்ச், பாஸ்தா, கார்ன்ஃப்ளேக்ஸ், பிஸ்கட், சாக்லெட்டுகள் மற்றும் கோகோ பொருட்கள் 12% அல்லது 18%-லிருந்து 5%-ஆக குறைக்கப்படும்.
> பேரீச்சம்பழம் மாதிரியான உலர்ந்த பழங்கள், பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 12%-லிருந்து 5%-ஆக குறையும்.
> சர்க்கரை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5%-ஆக மாற்றப்பட்டுள்ளது.
> தாவர எண்ணெய், விலங்கு கொழுப்பு, இறைச்சி மற்றும் மீன் தயாரிப்பு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 5%-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
> மிக்சர் உள்ளிட்ட சாப்பிட தயாராக இருக்கும் பேக் செய்யப்பட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 18%-லிருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில் வறுக்கப்பட்ட பருப்புகள் சேராது.
> சர்க்கரை அல்லது சுவை சேர்க்கப்பாடாத தண்ணீர், மினரல் வாட்டர் மீதான வரி 18%-லிருந்து 5%-ஆக மாற்றப்பட்டுள்ளது.
> விவசாய பொருட்கள்: விவசாய இடு பொருட்கள் மீதான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உரங்கள், விதைகள் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 12% அல்லது 18%-லிருந்து 5%-ஆக மாற்றப்பட்டுள்ளது.
> உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12% அல்லது 18%-லிருந்து 5%-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
>தனிநபர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ்களுக்கு இனி ஜிஎஸ்டி வரி இல்லை.
> பென்சில், கிரேயான்ஸ் உள்ளிட்ட எழுதுபொருட்கள், நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி சார்ந்த பொருட்கள் மீதான வரி பூஜ்யம் அல்லது 5%-ஆக மாற்றப்பட்டுள்ளது.
> நுகர்வோர் பொருட்கள்: ஜிஎஸ்டி மறுசீரமைப்பில் 32 இன்ச்களுக்கு மேலான டிவி, ஏசி, மானிட்டர், டிஷ் வாஷ் இயந்திரம் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் மீதான வரி 28%-லிருந்து 18%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
> காலணி மற்றும் ஆடை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியும் 12%-லிருந்து 5%-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
> ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 18%-லிருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
> ஆட்டோமொபைல் துறை: சிறிய கார்கள், 350 சிசி திறனுக்கு கீழான இருசக்கர வாகனம் மீதான ஜிஎஸ்டி வரி 28%-லிருந்து 18%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
> அனைத்து கார் பாகங்கள் மீதான வரி 18%-ஆக உள்ளது.
> மின் வாகனங்கள் மீதான வரி 5%-ஆக தொடரும்.
> விளையாட்டு பொருட்கள் மற்றும் பொம்மைகள், தோல், மரம் மற்றும் கைவினை பொருட்கள் மீதான வரி 5%-ஆக உள்ளது.
விலை உயரும் பொருட்கள்: ஒரு பக்கம் ஜிஎஸ்டி வரி சீரமைப்பு நடவடிக்கை காரணமாக பல்வேறு பொருட்களின் மீதான வரி விகிதம் குறைந்துள்ள நிலையில், ஆடம்பர பொருட்கள் உள்ளிட்ட சிலவற்றின் வரி 40%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
> பான் மசாலா, குட்கா, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், சர்தா, பீடி உள்ளிட்ட பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
> கார்பனேட்டட் குளிர்பானம், சோடா, இனிப்பு சேர்க்கப்பட்ட பானம் உள்ளிட்ட பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதற்கான ஜிஎஸ்டி வரி விகிதம் 18%-ஆக இருந்தது.
> ஆடம்பர பொருட்கள், சொகுசு கார்கள், விளையாட்டு போட்டிக்கான டிக்கெட்டுகள், ப்ரீமியம் மதுபான வகைகள் மீதான வரி 40% என அறிவிக்கப்பட்டுள்ளது.
> நிலக்கரி மீதான ஜிஎஸ்டி வரி 5%-லிருந்து 18%-ஆக அதிகரித்துள்ளது.
> குறிப்பிட்ட இடங்களில் இயங்கும் உணவகங்கள், லாட்டரி உள்ளிட்ட சேவை துறை சார்ந்த ஜிஎஸ்டி வரியும் உயர்ந்துள்ளது.