1. Home
  2. தமிழ்நாடு

இலங்கையில் 10 ஆயிரம் வீடுகளை கட்டும் திட்டம் : அதிபர் ரணில் - நிர்மலா சீதாராமன் அடிக்கல்..!

1

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துப் பேசினார். கொழும்பில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் 15 மில்லியன் டாலர் மதிப்பிலான பல்வேறு திட்டங்களின் அமலாக்கம் குறித்து இருவரும் ஆலோசித்தனர். மேலும், கொட்டக்கலை பகுதியில் மவுன்ட் வெர்னன் தேயிலைத் தோட்டத்தின் கீழ் பகுதியில் இந்திய நிதியுதவியுடன் 10,000 வீடுகள் கட்டும் திட்டத்துக்கு இருவரும் அடிக்கல் நாட்டினர்.

சந்திப்பின்போது, இலங்கை பொருளாதாரச் சரிவை சீர் செய்வதற்காக 4 பில்லியன் டாலர் அளவிலான நிதியுதவி வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமனிடம் அதிபர் விக்ரமசிங்க கூறினார். பின்னர் இந்தியாவிலிருந்து தமிழர்கள் இலங்கைக்கு புலம்பெயர்ந்த 200-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியான ‘நாம் 200’-இல் ரணில் விக்ரமசிங்க பேசியதாவது: இலங்கை குடிமக்கள் அனைவரின் உரிமைகளை நிலைநாட்டுவதே எனது தலைமையிலான அரசின் கொள்கை. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் நோக்கம் என்றார் அவர்.

விழாவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இலங்கை கடுமையான பொருளாதார சரிவில் சிக்கியபோது, உதவிய முதல் நாடு இந்தியாதான். இந்நாட்டுக்கு உதவுவதை எங்களது கடமையாக கருதினோம். மேலும் சர்வதேச பண நிதியம் மூலம் பிற நாடுகளும் உதவுவதற்கு இந்தியாவே வழிவகுத்தது. அண்மையில் நாகப்பட்டினம்-இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. யுபிஐ பணப் பரிவர்த்தனை தொடர்பான திட்டங்களும் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவதில் இங்கு வாழும் தமிழர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்றார் அவர்.

மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிழக்கு மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான திருகோணமலையில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கிளையை தொடங்கி வைத்தார். இலங்கையில் கடந்த 159 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் எஸ்பிஐ, அந்நாட்டின் மிகப் பழைமையான வங்கியாகும். இந்த வங்கி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தனது சேவைகளைத் தொடர்ச்சியாக அளித்து வருகிறது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே, எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து, இலங்கையில் செயல்படும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான லங்கா இந்தியன் ஆயில் நிறுவன வளாகத்தை நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். 

Trending News

Latest News

You May Like