1. Home
  2. தமிழ்நாடு

பாரத ரத்னா விருதை வழங்க அத்வானி வீட்டிற்கே சென்ற குடியரசு தலைவர்..!

1

மத்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், பாரத ரத்னா விருதுதான் நாட்டிலேயே மிக உயரிய விருதாகும். முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஐந்து தலைவர்களுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

பீகார் மாநில முதல்வராக  இருந்த சமூக சீர்திருத்தவாதியான மறைந்த கர்பூரி தாக்கூர், பா.ஜ.க. தலைவராகவும், துணை பிரதமராகவும் பணியாற்றிய 96 வயது எல்.கே.அத்வானி, மறைந்த பிரதமர் சவுத்ரி சரண்சிங், மறைந்த பிரதமர் பி.வி.நரசிம்மராவ், தமிழகத்தை சேர்ந்த மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் அத்வானியை தவிர்த்து முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் இரண்டு முறை பீகார் முன்னாள் முதல்வராக இருந்த கர்பூரி தாக்கூர் உள்ளிட்ட நால்வருக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் பாரத ரத்னா விருதை வழங்கினார்.விருதுகளை அவர்களின் குடும்பத்தினர் நேற்று  முன்தினம் பெற்றுக் கொண்டனர். 

முன்னாள் துணைப் பிரதமரும், பா.ஜ.க. தலைவருமான எல்.கே.அத்வானிக்கு அவரது இல்லத்தில் நேற்று ஜனாதிபதி திரௌபதி முர்மு, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்கினார். மூத்த தலைவர் அத்வானியின் உடல்நிலை சரியில்லாததைக் கருத்தில் கொண்டு அவரது இல்லத்திற்கு சென்று பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

ஒரு பாராளுமன்ற உறுப்பினராக, உரையாடல் மீதான அவரது நம்பிக்கை பாராளுமன்ற மரபுகளை வளப்படுத்தியது. உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும், அவர் எப்பொழுதும் எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய நலனைக் காட்டினார். 

இந்தியாவின் கலாச்சார மறுமலர்ச்சிக்கான அவரது நீண்ட மற்றும் அயராத போராட்டம் 2024-ல் அயோத்தியில் ராமர் கோவில் புனரமைப்பில் உச்சக்கட்டத்தை அடைந்தது.   சுதந்திரத்திற்குப் பிறகு, தேசிய முன்னுரிமைகளை மறுவடிவமைப்பதிலும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி கொண்டு செல்வதிலும் வெற்றி பெற்ற சில அரசியல் தலைவர்களில் அவரும் ஒருவர். அவரது சாதனைகள் இந்தியாவின் உள்ளார்ந்த திறமை மற்றும் உள்ளடக்கிய பாரம்பரியங்களின் சிறந்த வெளிப்பாட்டை வழங்குகிறது என தெரிவித்துள்ளார். 


 

Trending News

Latest News

You May Like