இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் உடல் அடக்கம்..!
தமிழகத்தில் பல்வேறு அணிகளாக பிரிந்து கிடந்த வணிகர்களை ஒருங்கிணைந்து ஒரு குடைக்குள் கொண்டு வந்து வலிமையான அமைப்பை கட்டமைத்தவர் தான் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன்.இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவியும், மூன்று மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். வணிகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், வணிகர் சங்கத்தை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வந்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 3-ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை அமைந்தக்கரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 5-ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பின்னர், அவரது உடல் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்காக மருத்துவமனையில் இருந்து பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் நேற்று அதிகாலை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து பெரம்பூர் பாரதி சாலையில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் பெரம்பூர் வியாபாரிகள் நல சங்க தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.மேலும், இவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து கடைகளும் நேற்று ஒருநாள் மட்டும் அடைக்கப்பட்டன.
இந்நிலையில் சென்னையில் வைக்கப்பட்டிருந்த த.வெள்ளையன் உடல் சொந்த ஊரான திருச்செந்தூரை அடுத்த பிச்சிவிளை கிராமத்தில் உள்ள தோட்டத்தில் இன்று அடக்கம் செய்யப்படவுள்ளது.