1. Home
  2. தமிழ்நாடு

3-வது முறையாக ஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி முர்மு அழைப்பு..!

1

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4-ம் தேதி எண்ணப்பட்டன. மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது.இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை தனித்து கைப்பற்றியது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின. தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது.

இதற்காக நேற்று  தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள், கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பழைய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் அமித்ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்களும், சந்திரபாபு நாயுடு, நிதீஷ்குமார், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். பின்னர் கூட்டத்தில் பங்கேற்க வந்த மோடிக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பளித்தனர். மோடியை பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வரவேற்றார்.

கூட்டத்தின்போது பேசிய பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங், பாஜக பாராளுமன்ற குழு மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடியின் பெயரை முன்மொழிந்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் பாராளுமன்ற குழு தலைவராக மோடியை தேர்வு செய்யும் தீர்மானத்தை அமித்ஷா வழிமொழிந்தார். இதையடுத்து சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து பேசினர். இதனை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் மோடி சந்தித்து தன்னை ஆதரிக்கும் எம்.பி.க்களின் பட்டியலை வழங்கினார். மேலும், ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆதரவு கடிதத்தையும் ஜனாதிபதியிடம் வழங்கினார். இதையடுத்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு அழைப்பு விடுத்தார். இதையடுத்து நாளை (ஜூன் 9) பிரதமராக மோடி பதவி ஏற்க இருக்கிறார். மாலை 6 மணிக்கு மோடி மற்றும் அமைச்சர்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதற்கிடையே கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த இலாக்காக்களை ஒதுக்கீடு செய்வது என்பது தொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் ஜே.பி.நட்டா வீட்டில் நேற்று மாலை ஆலோசனை நடந்தது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முக்கிய இலாக்கக்களை விட்டுதர பா.ஜ.க. மறுத்துள்ள நிலையில் நிதிஷ் குமார் கட்சிக்கு ரெயில்வே துறையும், 2 இணை அமைச்சர் பதவியும், சந்திரபாபு நாயுடு கட்சிக்கு 2 கேபினட் அமைச்சர் பதவிகளும் 4 இணை அமைச்சர் பதவிகளும் ஒதுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மத்தியில் புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில் இன்று கூட்டணிக் கட்சிகளுக்கான இலாக்காக்கள் ஒதுக்கீடு குறித்து முழுவிவரமும் தெரியவரும்.

Trending News

Latest News

You May Like