தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு..!
திருவாரூர் மாவட்டம் அருகே, நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் வரும் நவம்பர் 30ம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகை தரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருவாரூர் மாவட்டம் அருகே அருகே, நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து 2,700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். வரும் நவம்பர் 30ம் தேதி இந்த பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்க இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தமிழகம் வருகை தர உள்ளதாக பல்கலைக் கழக வட்டார தகவல்கள் கூறுகின்றன.
இது தொடர்பாக பல்கலைக் கழகத்தில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதுள்ளது. அதில், குடியரசுத் தலைவரின் வருகையை பல்கலைக் கழக துணைவேந்தர் கிருஷ்ணன் உறுதிப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. வரும் 23-ம் தேதி முதல், குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பல்கலைக் கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு ஏற்பாட்டுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
நவம்பர் 30ம் தேதி தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் கோவை வருகைதர உள்ளார். பின்னர், ஹெலிகாப்டர் மூலம், நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கிறார். பின்னர், மீண்டும் கோவை வந்து, அங்கிருந்து ஹெலிஹாப்டரில் நேரடியாக திருவாரூர் நீலக்குடியில் மத்திய பல்கலைக் கழக வளாகத்துக்கு வருகை தருவார். இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பின்னர், மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் கோவை செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.