1. Home
  2. தமிழ்நாடு

எங்கள் நிபந்தனைகளை எந்த கட்சி வழங்குகிறதோ அந்த கட்சியுடன் கூட்டணி - பிரேமலதா..!

1

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை ஏற்கனவே தொடங்கிவிட்டன.

இதனிடையே மறைந்த விஜயகாந்த் கட்சியான தே.மு.தி.க. இந்த தேர்தலை எவ்வாறு கையாள போகிறது என கேள்விகள் இருந்த நிலையில் கூட்டணி குறித்த ஆலோசனை கூட்டம் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நேற்று கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 

கூட்டத்திற்குப் பின்னர் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் பேசியதாவது:

மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்க்கு அரசு மரியாதை செலுத்திய தமிழக அரசுக்கு நன்றி.  எங்களுடைய தலைவர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்களின் தலைவராக இருந்தவர் விஜயகாந்த்.  மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பற்றி பேசும் போது நான் எமோஷனல் ஆகிவிடுகிறேன்.  அவருடைய நினைவிடம் தற்போது கோவிலாக மாறியுள்ளது.  கூகுள் மேப்பில் கூட விஜயகாந்த் நினைவிடம் என்பது தற்போது விஜயகாந்த் கோவில் என்று பதியப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் தனித்தனியாக கருத்து தெரிவித்தனர்.  வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்று பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.  தே.மு.தி.க. தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது. கேப்டன் இறப்பு மூலம் இது அனுதாபம் ஓட்டு என்று நினைக்காதீர்கள்,  அனைவரும் நல்ல தலைவரை இழந்து இருக்கிறோம்.

14 பாராளுமன்ற தொகுதி மற்றும் 1 ராஜ்யசபா எந்த கட்சி வழங்குகிறதோ அந்த கட்சி உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.  12 தேதி தே.மு.தி.க. கொடி நாள்.  அன்று தமிழ்நாடு முழுவதும் கட்சி கொடி பறக்கவிடப்படும். அன்றே கூட்டணி குறித்து முழுமையாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். 

தேர்தல் கூட்டணி குறித்து மறைமுகமாகவோ நேரடியாகவோ இதுவரை யாரிடமும் பேசவில்லை. தேர்தல் என்றாலே சவால் தான்.  கேப்டன் விஜயகாந்த் வாழ்நாள் முழுவதும் எதிர்நீச்சல் போட்டு வாழ்க்கையில் ஜெயித்தவர்.  தே.மு.தி.க. ஒரு லஞ்ச ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி.

நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ள நிலையில் அவருக்கு தே.மு.தி.க. சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.  மாவட்ட செயலாளர் கூட்டமானது சட்டமன்றத் தேர்தல், பாராளுமன்ற தேர்தல்,  உள்ளாட்சி தேர்தல் என அனைத்தும் குறித்துதான் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் தேர்தலில் போட்டியிட வேண்டுமென மாவட்ட செயலாளர்கள் கோரிக்கையாக இருக்கிறது. இவ்வாறு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Trending News

Latest News

You May Like