உங்கள் வாழ்வில் நோய் இல்லாமல் இருக்க ஆடி சனிக்கிழமை வழிபாடு..!
நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் இருக்கும். அந்த பிரச்சனைகள் தீர வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு விதத்திலும் நாம் வழிபாடு செய்வோம். இந்த பிரச்சனைகள் அனைத்தும் வருவதற்கு காரணமாக இருக்கக்கூடியது நம்முடைய கர்ம வினைகள். அதிலும் குறிப்பாக பரம்பரை நோய்கள் வருவதற்கு முக்கிய காரணமாக விளங்குவது நம்முடைய கர்ம வினைகளே. அந்த கர்ம வினைகளை கணக்கிட்டு நமக்கு பலாபலன்களை தரக்கூடியவராக திகழ்பவர் தான் சனீஸ்வர பகவான்.
அப்படிப்பட்ட சனீஸ்வர பகவானை நாம் சனிக்கிழமை தோறும் வழிபடுவது என்பது சிறப்பு என்று அனைவருக்கும் தெரியும். ஆடி மாதத்தில் வரக்கூடிய அந்த சனிக்கிழமையில் அம்மன் ஆலயத்திற்கு சென்று சில வழிமுறைகளை நாம் செய்யும் பொழுது நம்முடைய கர்ம வினைகள் குறைய ஆரம்பிக்கும். அதனால் நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும் சனீஸ்வர பகவான் படிப்படியாக குறைப்பார். அந்த வழிமுறைகளை பார்ப்போம். ஆடி மாதம் சனிக்கிழமை மாலை நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய அம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கும் அம்மனுக்கு நீர்மோர், பானகம் போன்றவற்றை நெய்வேத்தியமாக வைத்து வழிபட வேண்டும். பிறகு அங்கு வரும் பக்தர்களுக்கு தங்களின் கைகளால் இந்த நீர்மோரையும், பானகத்தையும் தானமாக தர வேண்டும். இப்படி சனிக்கிழமை அன்று மாலை நேரத்தில் இந்த பொருட்களை பக்தர்களுக்கு தானமாக தரும்பொழுது நம்முடைய கர்ம வினைகளால் ஏற்பட்ட பரம்பரை நோய்கள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
ஒருவர் தன்னுடைய கர்மவினைகள் தீர வேண்டும், அந்த கர்ம வினைகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறைய வேண்டும் என்று நினைத்தால் தங்களால் இயன்ற தான தர்மத்தை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் சனி பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் குறையும். அந்த வகையில் இதை ஆடி மாத சனிக்கிழமை மட்டும் செய்ய வேண்டும் என்று இல்லை. தீராத நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் குறிப்பிட்ட வாரங்கள் தொடர்ச்சியாக சனிக்கிழமை தோறும் இந்த பொருட்களை தானமாக தருவது மிகவும் சிறப்பு.மிகவும் எளிமையான இந்த வழிபாட்டு முறையை முறையாக பின்பற்றுபவர்களுக்கு அவர்கள் வாழ்வில் நோய் என்ற வார்த்தையே திரும்பவும் வராத அளவிற்கு அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
.png)