1. Home
  2. தமிழ்நாடு

மே 31-ல் ஆஜராகுகிறார் பிரஜ்வல் ரேவண்ணா : வீடியோ வெளியிட்டு தகவல்..!

1

கர்நாடகா மாநிலம், ஹாசன் எம்.பி-யும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் தேவகவுடாவின் பேரனுமானவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவரும், இவரது தந்தையும் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் பூதாகரமானதும் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றுவிட்டார். இதற்கிடையே புகார் அளித்த பெண்ணை கடத்திய வழக்கில் எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சில நாள்கள் கழித்து நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

 

இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணாவை நாட்டிற்கு திரும்ப கொண்டுவரும் பொருட்டு, அவருக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அழுத்தங்கள் அதிகரித்ததால், சமீபத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்பி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் தனது கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரித்திருந்தார். 

இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா வரும் 31ம் தேதி அன்று நாடு திரும்பி, தனக்கு எதிரான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா, "நான் இருக்கும் இடம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இந்த வீடியோவை வெளியிடுகிறேன். மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு, பல்வேறு காரணங்களுக்காக என் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. எனது வெளிநாட்டு பயணத்திற்கும் இந்த நிகழ்வுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

அது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. எஸ்ஐடி எனக்கு நோட்டீஸ் கொடுத்தது மற்றும் எனது வழக்கறிஞர் மூலம் அதற்கு பதிலளித்ததை மட்டுமே நான் அறிந்தேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். எனது வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அரசியல் சதி நடந்து வருகிறது. நான் அதை எதிர்கொள்வேன்" என தெரிவித்துள்ளார்.


 

Trending News

Latest News

You May Like