2 கோடி நிதியுதவி வழங்கிய பிரபாஸ்!
வயநாடு மாவட்டம் முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் கடந்த 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 152 பேர் காணவில்லை. இந்த நிலச்சரிவில் அதிகளவில் பாதிக்கப்பட்ட சூரல்மலை, வெளரிமலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் மீட்பு பணிகள் இன்றும் நடைபெற்று வருகிறது. இந்த கோர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்நிலையில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, நடிகர் மோகன்லால் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை அளிக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து திரைத்துறை கலைஞர்கள் பலர் நிதியளித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகை சேர்ந்த சியான் விக்ரம் 20 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கினார். கமல்ஹாசன் 25 லட்சம் ரூபாயும், நயன்தாரா 20 லட்சம் ரூபாயும் சூர்யா, கார்த்தி மற்றும் ஜோதிகா மூவரும் இணைந்து 50 லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்கினர்.
டோலிவுட்டில் புஷ்பா 2 பட ஹீரோ அல்லு அர்ஜுன் 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். தொடர்ந்து சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கிய நிலையில், நடிகர் பிரபாஸ் தற்போது 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார். நடிகர் மோகன்லால் அதிகபட்சமாக 3 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.