வெளியான போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்! 18 இடங்களில் காயம்.. கடும் சித்திரவதை..!

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித் குமாரை காவலர்கள் கடுமையாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அஜித் குமார் உயிரிழந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் திருபுவனம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர். மேலும், மடப்புரம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைத்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பூதாகரமான நிலையில், காவல் துறைக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். உடனடியாக குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஆறு காவலர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்துள்ளது. மேலும் முதல் தகவல் அறிக்கையே இல்லாமல் அஜித் குமாரை போலீசார் தாக்கியது தெரியவந்துள்ளது.
காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித் குமார் உடலுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. வழக்கமாக ஒரு மணி நேரமே பிரேத பரிசோதனை நடப்பதாகக் கூறப்படும் நிலையில், ஐந்து மணி நேரம் வரை நடைபெற்றுள்ளது. பின்னர் அஜித் குமாரின் உடல் காவல் துறையினர் பாதுகாப்புடன் மடப்புரம் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அஜித் குமார் உடலில் 18 இடங்களில் பெரிய அளவில் காயங்கள் இருந்துள்ளது. அஜித் குமாரின் மண்டை ஓடு தொடங்கி கை, முதுகு, கால்களின் பாதங்கள் உள்ளிட்ட இடங்களில் கடுமையான காயங்கள் இருந்துள்ளன. உடலின் வெளிப்புறம் மட்டும் இல்லாமல் உள்புறங்களிலும் ரத்தக் கசிவு உள்ளிட்ட காயங்கள் இருந்தது. அஜித் குமாரின் கழுத்துப் பகுதியில் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
மேலும் கழுத்தின் சங்கு பகுதியில் ஏற்பட்ட ஆழமான காயத்தால் அஜித் குமார் உயிரிழந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், அதேபோல உளவியல் அடிப்படையில் ஏற்பட்ட அதிர்ச்சி, அழுத்தம் மற்றும் உட்புற ரத்தக் கசிவு ஆகியவை கூட மரணத்திற்கு வழிவகுத்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடுமையான சித்திரவதையை அவர் அனுபவித்திருக்கலாம் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேத பரிசோதனை முடிவுகள் காவலர்களால் அஜித்குமார் தாக்கப்பட்டு உயிரிழந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது.
முன்னதாக இதுதொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை காட்டமான கேள்விகளை முன்வைத்துள்ளது. அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர் என்ன தீவிரவாதியா? சாதாரண வழக்கில் கைதான நபரில் எந்தவித ஆயுதங்களும் இல்லாத நிலையில், ஏன் இதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து அஜித் உயிரிழந்ததாக கூறப்படும் இடத்தில் திருபுவனம் குற்றவியல் நடுவர் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.