இன்ஸ்டாவில் இளம்பெண்ணின் ஆபாச படங்கள்.. போலி கணக்கை தொடங்கிய இளைஞர் சுற்றிவளைப்பு !

காதலிக்க மறுத்த பெண்ணின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி, பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றியுள்ளார் இளைஞர் ஒருவர்.
சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணின் ஆபாச படம் தொடர்ந்து இன்டாகிராமில் வலம் வந்துள்ளது. இதனை கண்டு இளம்பெண் மற்றும் இளம்பெண்ணின் உறவினர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து அடையாறு சைபர் க்ரைம் குழுவின் உதவியோடு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக, திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ்(30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷுக்கும் அப்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தன்னை காதலிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இதனை தவிர்த்த இளம்பெண், ராஜேஷூடன் பேசாமல் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் இன்ஸ்டாகிராமில் அப்பெண்ணின் பெயரில் போலியான கணக்கு ஒன்றை தொடங்கி, அதில் இளம்பெண்ணின் படங்களை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் ராஜேஷிடமிருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் ராஜேஷ் மீது வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
newstm.in