பிரபல யூடியூபர் டி.டி.எப் வாசனுக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன்..!

பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் கடந்த 17-ம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. அவரது பைக் பல அடி தூரத்துக்கு பறந்து போய் விழுந்தது. இந்தச் சம்பவத்தை அடுத்து, அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.எப்.வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில், டி.டி.எப். வாசன் தரப்பில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சாலையில் மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது கால்நடைகள் சாலையை கடந்ததால் திடீரென பிரேக் பிடித்தேன். இதனால், தனது இருசக்கர வாகனத்தின் சக்கரம் தூக்கியது. தான் பிரேக் பிடிக்காமல் இருந்திருந்தால் கால்நடைகள் மற்றும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்.
மேலும், விபத்தில் காயமடைந்துள்ளதால், சிறையில் உரிய சிகிச்சை பெற முடியவில்லை. இதனால், தனக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் மோசமாகி வருகிறது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளது. எனவே, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். தான் ஒரு அப்பாவி, எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறேன்" என்று மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து டி.டி.எப். வாசன் தரப்பில் ஜாமீன் கோரி 2-வது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது டி.டி.எப். வாசன் தரப்பில், ஆஜரான வழக்கறிஞர், "மனுதாரரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால், இனி அவர் வாகனம் ஓட்ட இயலாது. மேலும், அவர் 40 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருவதால், அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது காவல்துறை தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் டி.டி.எப். வாசனுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 3 வாரங்களுக்கு, டி.டி.எப். வாசன் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.