பிரபல நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்..!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணசித்ர நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் விஸ்வேஷ்வர ராவ். இவர், குழந்தை நட்சத்திரமாக 150 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். விக்ரம், சூர்யா நடிப்பில் வெளியான ‘பிதாமகன்’ படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர், சுமார் 350 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட இவர் தனது சினிமா வாழ்க்கையை எழுத்தாளர் மற்றும் இயக்குநராகத் தொடங்கினார்.
இவர், 1979-ம் ஆண்டு வெளியான ‘நாக்னா சத்யம்’ படத்திற்காகவும், 1980-ல் வெளியான ‘ஹரிச்சந்துருடு’ படத்திற்காகவும் சிறந்த திரைப்படத்திற்கான (தெலுங்கு) இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்றார். விஸ்வேஸ்வர ராவ் தெலுங்கு திரைப்படங்களில் பல நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை இவர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற இருக்கும் நிலையில், சிறுசேரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலக நண்பர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் சேஷூ, டேனியல் பாலாஜி, இப்போது விஸ்வேஷ்வர ராவ் என தொடர்ச்சியாக நடிகர்களின் இறப்பு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.