1. Home
  2. தமிழ்நாடு

பூவை ஜெகன் மூர்த்தி முன்ஜாமீன் மனு..! இன்று விசாரணை..!

1

திருத்தணியை அடுத்த திருவாலங்காடு களாம்பாக்கத்தைச் சேர்ந்த யுவராஜாவின் மகன் தனுஷ் (வயது 23). இன்ஸ்டாகிராம் மூலமாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வனராஜாவின் மகள் விஜயா ஶ்ரீயுடன் (வயது 21) தனுஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்தனர்.

இதனிடையே விஜயா ஶ்ரீ-க்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய விஜயா ஶ்ரீ, தனுஷை தேடி களாம்பாக்கம் வீட்டுக்கே வந்துவிட்டார்.

பின்னர் தனுஷுடன் விஜயா ஶ்ரீ-க்கு கடந்த மாதம் 15-ந் தேதி திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதிகளாக இருவரும் தனுஷின் நண்பர் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த பின்னணியில் தனுஷின் இருப்பிடத்தை தெரிவிக்குமாறு காரில் வந்த ஒரு கும்பல், தனுஷின் தம்பி 16 வயது சிறுவனான இந்திரசந்த்தை கடத்திச் சென்றது. இதனை நேரில் பார்த்த தனுஷின் தாயார் உடனடியாக போலீசில் புகார் கொடுத்தார்.

இப்புகாரின் அடிப்படையில் திருவாலங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்திரசந்த் கடத்தல் சம்பவம் தொடர்பாக வனராஜா, அவரது உறவினர்கள் மணிகண்டன், கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் மகேஸ்வரி என்ற பெண்ணையும் திருவள்ளூர் மாவட்ட போலீசார் கைது செய்தனர்.

இந்த காதல் மற்றும் கடத்தல் விவகாரங்களில் கேவி குப்பம் எம்.எல்.ஏ.வான புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுவன் இந்திரசந்த் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன் மூர்த்தியையும் கைது செய்ய திருவள்ளூர் எஸ்பி தமிழரசி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் களமிறங்கினர். பூவிருந்தவல்லி ஆண்டரசன்பேட்டையில் உள்ள பூவை ஜெகன் மூர்த்தி வீடு முன்பாகவும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

போலீசாரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, புரட்சி பாரதம் கட்சியின் தொண்டர்கள், சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டமும் நடத்தினர். இந்தப் போராட்டம் 4 மணிநேரம் நீடித்தது. இதன் பின்னர் ஜெகன் மூர்த்தி வீட்டுக்குள் சென்ற போலீசார் அவர் உள்ளே இருக்கிறாரா? என சோதனை செய்துவிட்டு திரும்பினர்.

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவை ஜெகன் மூர்த்தி ஜூன் 15-ந் தேதி சிறுவன் இந்திரசந்த் கடத்தல் வழக்கில் தமக்கு முன்ஜாமீன் வழங்க கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை உடனே அவசரமாக விசாரிக்கவும் பூவை ஜெகன் மூர்த்தி தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இம்மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஜூன் 16-ந் தேதி விசாரணை நடத்த உள்ளது.

Trending News

Latest News

You May Like