வெஜிடபிள் பிரியாணியில் இறந்து கிடந்த பூரான்..!
சென்னை அண்ணாசாலையில் உள்ள உணவகத்தில் வாடிக்கையாளருக்கு பரிமாறப்பட்ட பிரியாணியில் பூரான் கிடந்த வீடியோ வெளியாகியுள்ளது. தலப்பாகட்டி பிரியாணி உணவகத்தில் மதுரையைச் சேர்ந்த இளையராஜா மற்றும் அவரது நண்பர்கள் சாப்பிட சென்ற போது, அவர்களுக்கு பரிமாறப்பட்ட வெஜிடபிள் பிரியாணியில், இறந்த நிலையில் பூரான் கிடந்துள்ளது
சென்னை மட்டுமில்லாமல், தமிழகத்தின் பெரும்பாலன பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் பணிநிமித்தம் காரணமாகவும், நேரமின்மை காரணமாகவும் ஹோட்டல்களில் உணவருந்தி வருகின்றனர். இது போன்ற சூழலில் அவர்களுக்கு, ஒரு சில ஹோட்டல்களில் வழங்கப்படும் உணவில் வண்டு, கரப்பான்பூச்சி, பூரான், எலி போன்றவை இருப்பதாக வெளியாகும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மதுரையைச் சேர்ந்த இளையராஜா மற்றும் அவரது நண்பர்கள் பணி நிமித்தமாக சென்னை வந்துள்ளனர். இரவு உணவிற்காக சென்னை அண்ணாசாலையில் செயல்படும் தலப்பாகட்டி பிரியாணி கடையில் சாப்பிட்ட சென்றுள்ளனர்.
வெஜிடபிள் பிரியாணி சாப்பிட கேட்ட நிலையில் அவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவில் பூரான் இருந்ததாக கூறப்படுகிறது. பூரானைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த அவர்கள் ஹோட்டல் ஊழியர்களிடம் கேட்ட நிலையில் அவர்கள் தவறு நடந்துவிட்டது, அதற்கு நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம் என்று சொன்னதாக கூறப்படுகிறது.
மேலும் பாதி உணவு தான் சாப்பிட்டீர்கள் எனக்கூறி அதற்கு பில் தரவும் மறுத்ததாக தெரிகிறது. இது குறித்து இளையராஜா உணவு பாதுகாப்பு அதிகாரி எண்ணை இணையத்தில் எடுத்து கால் செய்த நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரி இணைய வழியில் புகார் அளிக்குமாறு கூறி அழைப்பை துண்டித்துள்ளனர்.
காவல் அவசர எண் 100க்கு அழைத்து புகாரளித்த நிலையில் காவல்துறையினர் வந்து விசாரணை மேற்க்கொண்டனர். மேலும் சென்னை மாநகராட்சி மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறையும் உணவகத்தின் மீதும் முறையாக பதிலளிக்காத உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளையராஜா கேட்டுக் கொண்டார்.
வழக்கமாக இரவு முழுவதும் திறந்திருக்கும் தலப்பாக்கட்டி பிரியாணிக்கடையை, இந்த பிரச்சனையின் காரணமாக உடனடியாக ஊழியர்கள் மூடியது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக ஹோட்டல்களில் நடைபெறும் இதுபோன்ற சம்பவம் பொதுமக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல்களில் சமைக்கப்படும் உணவில் சற்று கவனமுடன் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.