அந்தர் பல்டி அடித்த பொன்.ராதாகிருஷ்ணன்... நாங்க தான் கூட்டணி கட்சி என பேச்சு !

அதிமுக, பாஜக கூட்டணியில் சில நாட்களாக புகைச்சல் ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் ஸ்டேட்மன்ட் தான்.
வரும் தேர்தலில் நாங்கள் கடைசி நேரத்தில் தான் கூட்டணி குறித்து பேசுவோம். அதிமுகவுடனும் கூட்டணி வைக்கலாம், திமுகவுடனும் கூட்டணி வைக்கலாம் கடைசி நேரத்தில் தான் முடிவு எடுக்கப்படும் என கூறினார்.
இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக தகவல் பரவியது. அதனைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் தான் கூட்டணி என்று அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி கூறி உள்ளார்.
அவர் அப்படி சொல்வதில் தவறில்லை என்றார். அ.தி.மு.கவினர் அவர்களது கருத்தை கூறுவதில் எந்த தவறும் இல்லை. அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம் என்றார்.
சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து கட்சியின் மேலிடம் தான் முடிவெடுக்கும் என்று அவர் கூறினார். அ.தி.மு.க தலைமையில் எங்களது கூட்டணியில் உள்ளது என்று தெரிவித்தார். சசிகலா வருகைக்குப்பின் அ.தி.மு.கவில் மாற்றம் ஏற்பட்டால் அ.தி.மு.கவுடன் பா.ஜ.க கூட்டணி நீடிக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது அதைப் பின்னர் பார்ப்போம் என்றார்.
newstm.in